இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கை கடன்களை ஒரு நிலையான பாதையில் கொண்டுசெல்ல முடியும் என உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே அந்த நாட்டுடன் உடன்பாடு சாத்தியம் என தெரிவித்துள்ளது.
ரொய்ட்டருக்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மஜகிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.
சர்வதேசநாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா கடனுக்கான தெரிவுகள் மற்றும் கொள்கை திட்டங்கள் குறித்து இலங்கை பிரதிநிதிகளுடன் செவ்வாய் கிழமை கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை கடன்களை திருப்பி செலுத்துவதில் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடிகளை தீர்க்கும் விதத்திலும் பொருளாதாரத்தை கூடிய விரைவில் நிலையான பாதையில் கொண்டுசெல்வதற்கும் ஏற்றவிதத்தில் சர்வதேநாணயநிதியத்தின் திட்டம் காணப்படவேண்டும் என மஜகிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி குறித்தும் பொதுமக்கள் குறிப்பாக வறியவர்கள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் சர்வதேச நாணயநிதியம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த மாதம் இடம்பெற்ற இலங்கை குறித்த மறுஆய்வின் போது பொதுக்கடன்கள் பேணமுடியாத நிலையில் உள்ளன என்பது குறித்தும் சர்வதேச நாணயநிதியம் உதவியை வழங்குவதற்கு முன்னர் கடன்நிலைத்தன்மையை பேணுவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சர்வதேச நாணயநிதியம் உறுதியாக தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment