யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அப்பகுதியில் உள்ளவர்கள் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயிருந்தார்.
காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அரியாலை மணியந்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தி இருந்தனர்.
அதன் போது , வீட்டு வளவினுள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட இடத்தினை அகழ்ந்து சோதனை நடத்த நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்துடன் வீட்டில் குடியிருந்த கணவன் , மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்களது உறவினர் முறையான இளைஞன் ஒருவர் ஆகிய மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா , சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன் முன்னிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த போது , சுமார் 6 அடி ஆழமுள்ள கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் மற்றுமொரு கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்40
Post a Comment