கியூப ஹோட்டல் வெடி விபத்தில் 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்; மீட்புப் பணி தொடர்கிறது - Yarl Voice கியூப ஹோட்டல் வெடி விபத்தில் 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்; மீட்புப் பணி தொடர்கிறது - Yarl Voice

கியூப ஹோட்டல் வெடி விபத்தில் 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்; மீட்புப் பணி தொடர்கிறது



கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது தெரிய வந்தது.

ஹோட்டலை புதுப்பிக்கும் பணி நடந்ததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை. ஆனால் சக்திவாய்ந்த வெடி விபத்தால் ஹோட்டலை சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று,  இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இன்று அதிகாலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. 74 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து ஜனாதிபதி மிகுவல் டயஸ் கேனல் கூறும்போது, ‘இது குண்டு வெடிப்போ அல்லது தாக்குதல் சம்பவமோ கிடையாது. இது ஒரு சோகமான விபத்து. ஹோட்டலை சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்’ என்றார்.

இந்த விபத்து தொடர்பாக கியூபா டி.வி. சேனல் கூறும்போது, லொறியில் இருந்து ஹோட்டலுக்கு எரிவாயு விநியோகித்த போது கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post