அத்தியாவசியப் பொருட்கள் இன்றி அல்லல்படும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமிழக அரசின் தீர்மானம் தமிழக சட்டசபையில் கட்சிபேதமின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்றும் தமிழக அரசின் மேற்கண்ட மனிதாபிமான உதவிகளுக்கு ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈபிஆர்எல்எவ்வின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு:
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழக அரசானது இந்திய ரூபாயில் 123கோடி ரூபாய் பெறுமதியான அரசி, பருப்பு, மருந்து வகைகள், குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அனுப்புவதாக எடுத்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டு, அதற்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றியதையிட்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம் தமிழக அரசிற்கும் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழக அரசு காலாதிகாலமாக ஏதிலிகளாகத் தஞ்சம் அடைந்த எமது மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வந்துள்ளது. அண்மையை வரவு-செலவு திட்ட உரையில் ஈழத் தமிழ் மக்களுக்கான வீட்டு வசிதிகள், கல்வி வசதிகள், வாழ்வாதா வசதிகள் போன்றவற்றை திமுக அரசு செய்ததையும் நாங்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம்.
தமிழக அரசு தனது இரத்த உறவுகளான இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் பல உதவிகளைச் செய்திருக்கின்றது. அவ்வாறே இப்பொழுதும் அவர்கள் செய்ய விரும்பியபோதிலும்கூட இலங்கையில் உள்ள பல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி, இனம், மதம், மொழி கடந்து இங்கு எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அந்த உதவிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்று கேட்டதற்கிணங்க, தமிழக அரசும் பெருமையுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அந்த உதவியைச் செய்ய முன்வந்திருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் தமிழக சட்டசபையின் சகல அங்கத்தவர்களும் தமது ஒருமாத ஊதியத்தை இலங்கை மக்களுக்குக் கொடுப்பதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இந்த மனிதாபிமான உதவிகளை நாம் வாழ்த்தி வரவேற்பதுடன், இன்றைய நிலையில் இலங்கையின் பெறுமதியில் ஏறத்தாழ 500கோடி ரூபாய்க்கும் அதிகமான மிகப் பிரமாண்டமான நிதியுதவியில் அத்தியாவசியப் பண்டங்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்திருக்கிறது.
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்ஞாலத்தின் மானப் பெரிது.
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, தமிழக அரசு காலம் அறிந்து இந்த உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கின்றது. இந்திய ஒன்றிய அரசு இவ்வுதவிகளை மிக விரைவாக இலங்கை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்திய அரசினதும் தமிழக அரசினதும் அவசர மனிதாபிமான உதவிகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி சொல்வதுடன் மட்டுப்படுத்திக்கொள்ளாமல்;, இதுவரை காலமும் இந்திய மற்றும் தமிழக மக்கள்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளை இத்தகைய மனிதாபிமான உதவிகளின் பின்னராவது தமது உண்மையான நண்பர்கள் யாரென்று தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மேலாதிக்க மனோநிலையில் உள்ள சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
Post a Comment