தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியம் சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் - Yarl Voice தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியம் சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் - Yarl Voice

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் இராசதானியம் சிறுதானிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற பெயரில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இராசதானியத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றுள்ளது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக ஓய்வுநிலை பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.  

சிறுதானியங்கள் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தன. தற்போது இவை வழக்கொழிந்து வரும் நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியையும்,
 காலநிலை மாற்றங்களையும் கருத்திற்கொண்டு மீளவும் இவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் அச்சுவேலிப் பகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு குரக்கன், வரகு, பயறு ஆகியவற்றின் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

விவசாயிகள் பெற்றுக்கொண்ட விதைகளின் இரண்டு மடங்கு விதைகளை அறுவடையின் பின்னர் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கட்டணம் எதுவுமின்றி வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளுடனேயே விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

சிறுதானிய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விவசாயிகளுக்குச் செய்துகொடுக்கும் எனவும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுதானிய விதைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post