யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மாதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் சரணடைந்தும் மற்றொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுமுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் கொலைக்கு உடந்தையாக உள்ள இருவரே பொலிஸ் காவலில் உள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது- 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தையடுத்து போத்தலினால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் பொலிஸார் தேடி வந்தனர்.
அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் வீட்டில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
குடத்தனை மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என்ற அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
Post a Comment