26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் பேரன்புத் தாயார், விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி அவர்கள் 15.06.2022 புதன்கிழமையன்று தனது 79 ஆவது வயதில் இறைபதம் அடைந்துள்ளார்.
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்ற முகவரியை வாழ்விடமாகக் கொண்ட அன்னார், கடந்த 25 ஆண்டுகளில் தனது அன்பு மகனின் விடுதலைக்காக உடல்வலுவுள்ளவரை போராடி நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர், தனது இறுதி வாழ்நாட்களில், "என்ரை பிள்ளைக்கு என்ரை கையாலை ஒருபிடி சோறெண்டாலும் ஊட்டிப்போட்டுத் தான் உயிரை விடுவன். அவன்ர மடியிலை தான் என்ர சீவன் போகும். அவன்தான் எனக்கு கொள்ளி வைக்க வேணும்." என்று உறுதியோடு நம்பிக்கொண்டிருந்தார்.
ஆனபோதும், அந்தத் தாயாரின் ஏக்கத் தவிப்பு நிறைவேறாமலே, அவர் விண்ணுலகை சென்றடைந்தமை பெருந்துக்கமே. இந்த ஈழத் தாயின் கனவு விரைவில் மெய்ப்பட வேண்டுமென்று, மனித நேயங்கொண்ட நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக..
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, 'தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்கி இறையருளை வேண்டி நிற்கிறது.
அத்துடன், பெற்ற தாயின் இழப்புத் துயரை உறவுகளோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் சிறையறைக்குள்ளிருந்து வெந்து கொண்டிருக்கும் பார்த்தீபனுக்கும், அவரது குடும்ப உறவுகள், நட்புகளுக்கும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றுள்ளது.
Post a Comment