நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையானது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைமையாக உள்ளது.
இந்நிலையில் பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடாத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம். அதிலும் ஆசிரியர்கள் ஐந்து நாட்களும் பயணம் செய்து கற்பித்தல் பணியில் ஈடுபடுவது முடியாத காரியம்.
நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தபடியே உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வதென்பது உழைப்பின் முழுத் தொகையையும் பயணத்திற்கு செலவழிக்கவேண்டியுள்ளது.
ஆசிரியர்களை முழு நாட்களும் அழைப்பதெனில் அவர்களின் போக்குவரத்து செலவீனத்தில் அரைப்பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் மற்றைய திணைக்களங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஒத்ததாக பாடசாலைகளை இயக்குவதே சிறந்த வழியாகும்.
ஆசிரியர்களின் பாடநேரங்களை அதிகரித்து அவர்களை சுழற்சி முறையில் அழைப்பதே பொருத்தமானது. இதனை தாங்கள் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த நடைமுறையானது பாடசாலை அதிபரின் நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டதாக நெகிழ்ச்சிப் போக்குடையதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சகல மார்கங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உணவுப்பஞ்சம், போக்குவரத்துக் கஸ்டம், அன்றாட வாழ்க்கைக்கான துயரம். இவை அனைத்துமே மாணவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டில் உள்ள குழந்தைகளையும் பாதித்துள்ளது.
போதிய போசாக்கின்மையால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். இது அபாயகரமானது என்பதால் மாணவர்களின் மதியபோசனம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கான போசாக்கு உணவு பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டும். என கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment