போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.
அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.
பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.
விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார்.
எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
Post a Comment