"அரச நிர்வாகப் பணியிலிருந்து நான் விலகுகின்றேன். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைப்படாது. அது தொடரும்."
- இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது எம்.பி. பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று கையளித்த பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஊடங்கள் முன்பாக ஆங்கிலத்தில் பதிலளித்தால் மறுபடியும் 'கப்புடா' சர்ச்சை வந்துவிடும். சிங்கள மொழியிலேயே கதைக்கின்றேன்.
அமைச்சுப் பதவியை வகித்த காலத்தில் என்னால் முடிந்தவற்றை மக்களுக்காகச் செய்தேன். எனினும், மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்ய முடியாமல்போனது.
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.
21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் எனத் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவே உள்ளது" - என்றார்.
Post a Comment