நாட்டிற்குள் எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 61 ஆயிரம் மூடை உர விநியோகத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விவசாயிகள் சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உழைப்பவர்கள் ஏமாற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் நித்திரை தூங்குபவர்களிற்கு அள்ளி வழங்கியதன் அறுவடையினையே இன்று நாடு அனுபவிக்கின்றது. இதனை அதிகாரிகள் இன்னும் உணர்வதாகவும் இல்லை.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிறுபோக விதைப்பு இறுதித் திகதி 2022-04-30 என கணக்கிடப்பட்டபோதும் உழவிற்கான எரிபொருள் இன்மையால் 2022-05-31 ஆம் திகதியை தாண்டியும் விதைப்பு இடம்பெற்றது. அதாவது தறபோது 27 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மாவட்டத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் ஏக்கர் அறுவடையை அண்மித்துவிட்டது. அதேநேரம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் நிலம் 45 நாள் பயிரிலேயே உள்ளது. இந்த 45 நாள் பயிர்களிறகு தற்போது உரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு வழவ்கினால் மட்டுமே முழுமையான உற்பத்தியை பெற முடியும்.
இதேநேரம் மாவட்டத்தில் முழுமையான வயல் அறுவடைக்கு தயாராகிவிட்டது. உரம் தேவை இல்லை என அறிக்கையிடப்பட்டு கண் துடைப்பிற்கு வெறும் 40 மூடை உரம் வருகின்றது. இவ்வாறு அறுவடைக்கு தயாராகிவிட்டது என்ற அறிக்கையை எந்த திணைக்கள அதிகாரி அனுப்பி வைத்தார். மாவட்டச் செயலகமா, கமநல சேவைத் திணைக்களமா அல்லது விவசாயத் திணைக்களமா உறுதி செய்தது என்பதனை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தியே ஆக வேண்டும்.
இந்த நாட்டின் சாபக்கேடு இதுதான் என்ற அடையாளமாக அமைந்த இந்தப் பாவச் செயலை செய்த அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து வயலை நேரடியாகப் பார்வையிட வேண்டும் ஏனெனில் எதிர் வரும் நாட்களில் எமது போராட்ட வடிவம் எந்த உருவத்தில் இருக்கும் என நாம் தற்போது கூற விரும்பவில்லை. இதனை சம்பந்தப்பட்ட சகலரும் உடன் கவனத்தில் எடுப்பது வீணான மனக் கசப்புகளை தவிர்க்கும் என்றார்.
இது தொடர்பில் மாவட்ட கமநல உதவி ஆணையாளர் பா.தேவரதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த அளவினையோ அல்லது வயல் நிலவரம் தொடர்பிலோ எம்மால் அறிக்கையிடப்படவில்லை என்றார்.
விவசாய சம்மேளணத்தின் கூற்றுத் தொடர்பில் மாவட்ட அரச அதிபரான திருமதி.ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
மாவட்டத்தின் நீர் அளவையொட்டி முதலில் தீர்மானிக்கப்பட்ட அளவினைவிட 5ஆம் மாதம் மேலும் 2 ஆயிரத்து 500 கெக்டேயர் விதைப்பு அனுமதிக்கப்பட்டது. அதனால் அவை தற்போது சிறு பயிராகவே இருக்கும். இந்த அளவிற்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோ யூரியா தேவை என்ற விபரத்தினை நாமும் அனுப்பியிருந்தோம். இருப்பினும் 40 மூடையை தீர்மானித்தமை தொடர்பில் எமக்கும் ஏதும் தெரியாது என்றார்.
Post a Comment