கொழும்பு - காலிமுகத்திடலில் அரச படைகள் மேற்கொண்ட அராஜக நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று மாலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் சட்டத்தரணிகள் படை களமிறங்கியிருந்தது.
காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், நுழைவாயிலை அடைத்தும் முற்றுகையிட்டிருந்த அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களையும் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களையும் அகற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போதே மேற்படி 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது படையினரின் தாக்குதலில் காயமடைந்த பி.பி.சி. ஊடகவியலாளர் உள்ளிட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படையினர் மற்றும் பொலிஸாரின் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலிருந்தும், சர்வதேச நாடுகளிலிருந்தும் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment