போராட்டக்காரர்கள் மீதான படையினரின் தாக்குதலுக்கு சுகாஷ் கண்டனம்..!! - Yarl Voice போராட்டக்காரர்கள் மீதான படையினரின் தாக்குதலுக்கு சுகாஷ் கண்டனம்..!! - Yarl Voice

போராட்டக்காரர்கள் மீதான படையினரின் தாக்குதலுக்கு சுகாஷ் கண்டனம்..!!



காலி முகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய போராட்டக் குழுவினர் மீதும் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

இப்போராட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படா விட்டாலும் சகோதர சிங்கள தேசத்தின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் என்ற ரீதியில், அங்கே மேற்கொள்ளப்படுகின்ற சர்வாதிகாரத்தையும் அராஜகத்தையும் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகச் செயற்படுகின்ற நாங்கள் கண்மூடி மௌனிகளாகப் பேசா மடந்தைகளாகப் பார்த்துக்கொண்டிருப்பது தமிழினத்தின் அரசியற் பண்பாட்டிற்கு முரணானது!

இத்தாக்குதல் புதிதாகப் பதவியேற்ற அரச நிர்வாகத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதைத் துலாம்பரமாகக் காட்டிநிற்கின்றது.

ஜனநாயகப் போராட்டங்களை ஆயுதத்தால் அடக்க முற்படுவது அராஜகத்தின் உச்சக்கட்டம். பேனாமுனை கொண்டு செயற்படும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை நசுக்கி அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் முட்டாள்தனத்தினதும் அதியுச்சமாகப் பார்க்கப்படவேண்டியது.

ஜனநாயக விழுமியங்களின் மீது தொடுக்கப்படும் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் எதிராக என்றும் எங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கும். அரச இயந்திரத்தினதும் இராணுவத்தினதும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஊடக உறவுகளுக்கும் எமது ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றோம்!

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post