சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளதோடு உத்தரவாதங்களையும் கோரியுள்ளது.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்று அமையப்பெறுமாயின், அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய வரைபடம் முன்கூட்டியதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எழுத்துமூலமான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை விரட்டியடித்து, 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையில் மைத்திரியாரை ஜனாதிபதியாகக் கொண்டுவந்தமைக்கு மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரோடு இணைந்து ராஜபக்ஷக்களை விரட்டியடிக்க முக்கிய பங்கை மறைமுகமாக வகித்தவர் தமிழ்த் தேசியத்தின் சட்டமேதை சுமந்திரன்.
அந்தத் தேர்தலில் பேயா, பிசாசா என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 'தெரிந்த பேயைவிட தெரியாத பிசாசு மேல்' என்ற நிலையில் மைத்திரியாருக்கு ஆதரவுக் கரம் கொடுத்து வடக்குக் கிழக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவே தீர்மானிக்கும் சக்தியாக மாறி மைத்திரியை ஜனாதிபதியாக்கியது.
அந்தத் தேர்தலில் தம்பியைக் காப்பாற்றுவதற்காக ராஜபக்ஷக்களின் காலில் மண்டியிட்ட கஜேந்திரர்கள் கூட்டு, அவர்கள் போட்ட அற்ப ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு மீண்டும் மூன்றாவது தடவையாக ராஜபக்ஷக்களை கொண்டுவர தலையால் குத்திமுறிந்தது. ஆனால், மக்கள் அவர்களின் கருத்தை நிராகரித்ததோடு அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களையும் கடாசிக் குப்பைக்குள் வீசினர்.
2015 ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு நேரடியாக மைத்திரியாருக்கு ஆதரவு வழங்கும்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ''இப்பவும் எங்களை நம்புகின்றீர்களா? ஆட்சியமைத்தபின் தமிழ் மக்களுக்கு செய்யவேண்டியவற்றை எழுத்தில் பிரகடனப்படுத்துவோம்'' - என்றார். அதற்கு தமிழ் மக்களின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா, ''எமக்கு ஏமாற்றப்படுவது ஒன்றும் புதிதல்ல. உங்களது தந்தையின் ஆட்சியிலிருந்து தொடர்ந்துவரும் பெரும்பான்மை ஆட்சியாளர்களால் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். நாம் எழுத்துமூலம் உங்களிடம் எமது அபிலாஷைகள் தொடர்பில் கோரினால், ராஜபக்ஷக்கள் அந்த ஒரு காரணத்தை வைத்தே இனவாதப் பூதத்தைக் கிழப்பிவிட்டு இலகுவில் வென்றுவிடுவார்கள். மீண்டும் நாம் உங்களை நம்புகின்றோம்'' - என்றார்.
நல்லாட்சி அமைந்தது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். ஒன்றும் சாதிக்கப்படவில்லை என்று இல்லை. நிறைய சாதித்தோம். ஆனால் இலக்கை அடையவில்லை என்றே கூறலாம். மறுபக்கம் ஞாபகமறதி அதிகம் உள்ளவர்களுக்கு என்ன சாதித்தோம் - என்ன கிழித்தோம் - என்ற கேள்வி எழலாம்.
வடக்குக் கிழக்கில் ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட்டன. பலாலி சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது. ஏராளமான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
தமது சுயநல வாழ்வை நோக்காது, நாம் வாழவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தம்மை மாய்த்த எம் உணர்வுக்குரியவர்களுக்கு எந்தத் தடைகளுமின்றி அஞ்சலிக்க முடிந்தது. ஏராளமான அபிவிருத்திகள் நடைபெற்றன.
மக்கள் சுதந்திரமாக வாழ முடிந்தது. யாரும் எவருக்கும் அஞ்சாமல் தம் விருப்பப்படி ஆட்சியாளர்களைக்கூட விமர்சிக்கின்ற - முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடுகின்ற - கருத்துச் சுதந்திரம் காணப்பட்டது.
இன்று அனைவராலும் பேசப்படுகின்ற - மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று எண்ணுகின்ற - 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டது. நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்கின. நாட்டில் சட்ட ஆட்சி நிலவியது.
உதாரணத்துக்கு, நாட்டின் நிறைவேற்று அதிகாரம் மிக்கவரான ஜனாதிபதி மைத்திரியார், அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட, சட்ட ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு அரசமைப்பு காப்பாற்றப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்றமே அரசமைப்புச் சபையாக மாற்றப்பெற்று, அதில் எமது பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டு, எமது அபிலாஷைகளை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு வரைவு நகல் நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
அது இறுதிசெய்யப்படாதமைதான் வருத்தத்துக்குரியது. ஆனால், பல விடயங்கள் நடந்தாலும் எவையும் பூரணப்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான்.
அதனால்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் புதிய அரசு அமைப்பதிலும் காத்திரமான பங்கு வகிக்க உள்ளது. இனியும் குட்டக்குட்டக் குனிந்து இருக்கமுடியாது என்பதால், தமிழ் மக்கள் சார்பில் அதன் பேச்சாளர் - சட்ட வல்லுநர் - சுமந்திரன் அவர்கள் எழுத்துமூலக் கோரிக்கையை ஆட்சியாளர்களிடம் விடுத்துள்ளார்.
ராஜிதசேனாரத்ன, ஏரான் விக்கிரமரட்ன, ரஞ்சித் மத்துமபண்டார, அநுரபிரியதர்சன யாப்பா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகிய வண்ண, சுமந்திரன், மனோகணேசன், ஜீவன் தொண்டமான், வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் பங்குபற்றிய கூட்டத்திலேயே சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது, சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு -
''சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம்.
''இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியிலும், கூட்டமைப்பிலும் கலந்துரையாடியே இறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
''இருப்பினும், கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துகொண்ட நான் எமது தொடர்ச்சியான நிலைப்பாட்டை ஏனைய கட்சிப்பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினேன்.
''குறிப்பாக சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படுவதாக இருந்தால் அந்த அரசாங்கத்தின் அடுத்தக்கட்டச் செயற்பாடுகள் தொடர்பிலான வரைபடமொன்று வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
''அதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தொடர்பான சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கவுள்ளது.
''அத்துடன், மிகமுக்கியமாக, அமையப்பெறும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கமானது, இந்த நாட்டில் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்காக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான புதிய அரசமைப்பொன்றை தாமதமன்றி உருவாக்க வேண்டும்.
''அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, சுயாதீன குழுக்களை ஸ்தாபித்தல், நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
''இந்தவிடயங்களை உள்ளடக்கிய எழுத்துமூலமான உறுதிப்பாட்டை சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கும் அனைத்து தரப்புக்களும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
''இந்த விடயத்தில் உள்ள நியாயப்பட்டை ஏனைய தரப்புக்கள் ஏற்றுக் கொண்டதோடு, இவ்விடங்கள் பற்றிய பரந்துபட்ட கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன''. - என்றார்.
Post a Comment