"நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்லன். நான் என்றுமே மக்களின் நண்பன்."
- இவ்வாறு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நேற்று நண்பகல் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான ரணில் விக்கிரமசிங்க, மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.
இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அங்கு பிரிட்டனின் 'ஸ்கை நியூஸ்' ஊடகவியலாளர் ஒருவர், இந்நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பழைய ராஜபக்ச ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்றும் புதிய ஜனாதிபதி ரணிலிடம் கேட்டார்.
"நான் எப்படி ராஜபக்சக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்குத் தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபக்ச ஆதரவாளரா என்று என்னிடம் கேட்கின்றீர்கள்" - என்று ரணில் பதிலளித்தார்.
'இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?' - என்று குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு,
"இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். ஒரு ஊடகவியலாளராக நீங்கள் ஆழ்ந்த தேடலில் ஈடுபட வேண்டும். இது போன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்" - என்று ரணில் பதிலளித்தார்.
'நீங்கள் ராஜபக்சக்களின் நண்பன் இல்லையா?' என்று மீண்டும் அந்த ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு,
"நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்லன். நான் என்றுமே மக்களின் நண்பன். இன்னொன்றையும் கூறுகின்றேன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன். நான் அவருக்கு வாக்களித்ததில்லை. அவர் ஒரு கட்சி, நான் இன்னொரு கட்சி. நான் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று கூறுவது நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை எனது கட்சியைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக மட்டுமே பார்க்கின்றேன்" - என்று ரணில் பதிலளித்தார்.
Post a Comment