ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி நாடாளுமன்ற மூலமாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலமாக எமது நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக இருக்கும்.
அவ்வாறான நடவடிக்கையை எடுக்க மறுப்பீர்களானால் மீண்டும் வித்தை காட்டுகின்ற வேலையை செய்வீர்களாக இருந்தால் 13 ஆம் திகதியில் இருந்து மீண்டும் போராட்டம் வெடிக்குமென ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைமை
போராட்டக்காரர்களை எடுத்துக் கொண்டாலும் சரி மக்களை எடுத்துக் கொண்டாலும் சரி இடதுசாரிகளை எடுத்துக் கொண்டாலும் சரி அனைவரும் ஒன்று சேர்ந்தே இந்த வெற்றி கிடைத்தது. நாடாளுமன்றத்தில் புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மீண்டும் இந்த நாட்டில் தாங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த 74 வருடமாக இருந்த சாபக்கேடு அரசியல்வாதிகள் மீண்டும் குடுமிச்சண்டையில் ஈடுபடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். அதனுடன் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பிறகு இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மிகக் குறுகிய காலத்திற்கான இடைக்கால அரசாங்கமாக அது இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த நாட்டில் நிலையான ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான மக்கள் ஆணையைப் தேர்தலை நடத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாத காரணமாக இந்த நாட்டிற்கு வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்ளவோ ராஜதந்திர ரீதியான உறவை பேணவோ வெளிநாட்டில் கடனை பெற்றுக் கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நாட்டில் நிலையான ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும்.
நாடு பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றது. ஆகவே அந்த அதள பாதாளத்தில் இருந்து மீட்க வேண்டுமாக இருந்தால் குறுகிய காலத்தில் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டு தேர்தலை நோக்கி செல்ல வேண்டும்.
மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கருத்து காணப்படுகிறது.
இந்த நாட்டை பொறுப்பேற்பதற்கு நாம் தயார். நாட்டைக் கட்டி எழுப்புவதற்கும் நாம் தயார். இந்த நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் நாம் தயார். அதற்கான வேலைத்திட்டங்களோடு மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் மத்தியில் செயல்படுகின்றது.
கோட்டாபய மறுபடியும் மக்களுடன் ஒரு விளையாட்டை காட்டிக் கொண்டிருக்கின்றார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் தனது நரித்தனமான மூளையின் காரணமாக நரி விளையாட்டை காட்டுகின்றார். இந்த நரி விளையாட்டை இனி மக்களிடம் செல்லுபடியாகாது என்பது உண்மை.
ஏனென்றால் கோட்டாபய ராஜபக்ஷ அடித்து விரட்டப்பட்டதன் பிறகு அவருக்கு வழங்கிய 69 லட்சம் மக்களின் ஆணையும் அதனுடன் அடித்து துரத்தப்பட்டிருக்கின்றது. அதனால் இனி மொட்டு கட்சிக்காரர்கள் வேறு யாரும் இந்த நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அருகதை அற்றவர்களாக மக்கள்
ஆக்கியிருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனம் கூட பெற முடியாத ரணில் விக்ரமசிங்க இனியும் பிரதமராக பதவி வகிக்க அருகதை அற்றவராக மக்கள் மாற்றி இருக்கின்றார்கள். அதனால் நாட்டை ஆளுவதற்கு அருகதை அற்றவர்கள் தொடர்ச்சியாக இந்த ஆட்சியை கைப்பற்றி கொள்வதற்கு அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அதனால் இலங்கையில் வாழ்கின்ற மக்கள் தெளிவாக இருக்கின்றனர். 13ம் திகதி ஜனாதிபதி ராஜினாமா செய்வதாக கூறப்படுகின்றது. 20ஆம் திகதிக்கு முன்னதாக இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடு தற்போது கடந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தீர்மானகரமான நிமிடங்களாக இருக்கின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி நாடாளுமன்ற மூலமாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலமாக எமது நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறான நடவடிக்கையை எடுக்க மறுப்பீர்களானால் மீண்டும் வித்தை காட்டுகின்ற வேலையை செய்வீர்களாக இருந்தால் 13 ஆம் திகதியில் இருந்து மீண்டும் போராட்டம் வெடிக்கும்.
போராட்டம் ஒன்றையே தீர்வாக மக்கள் பார்க்கின்றார்கள். ஆகவே போராட்ட களத்தில் உயிரோட்டமாக இருக்கின்ற மக்களுடன் விளையாட வேண்டாம் என்றார்.
Post a Comment