போர்க்குற்றங்கள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது.
அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கேள்வி - பதில் நேரத்தின்போது,
" சிங்கப்பூரில் தலைமறைவு வாழ்வு வாழும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, போர்க்குற்றங்களுக்காக கைது செய்யுமாறு அந்நாட்டு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவுக்கு விசா வழங்க அமெரிக்காவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா" என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
" நீங்கள் கூறும் விவகாரங்கள் பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எனக்கும் அது பற்றி தெரியாது. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டில் பதுங்கவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே சென்றுள்ளார். அவருக்கு ஏதேனும் சிக்கல் எனில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எமது நாட்டில் உள்ள துறைசார் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்." - என்றார்.
Post a Comment