கோட்டாவைக் கைதுசெய்! - மட்டு. சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்து - Yarl Voice கோட்டாவைக் கைதுசெய்! - மட்டு. சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்து - Yarl Voice

கோட்டாவைக் கைதுசெய்! - மட்டு. சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்து

 

"இந்த நூற்றாண்டில் பாரியளவிலான இன அழிப்பை மேற்கொண்ட கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்."

- இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அருட்தந்தை,

"2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் அண்மையில் இலங்கையில் இருந்து தென்னிலங்கை மக்களால் விரட்டப்பட்டுள்ளார்கள். அனைவருக்கும் தெரியும் சர்வதேசத்துக்கும் தெரியும் இவர்கள் மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டிலேயே உலகிலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது இனவழிப்பாகும்.

இந்த அழிப்பை மேற்கொண்டவர்களுக்கு எதிராக தமிழர் தரப்பு பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தது மாத்திரமல்ல, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுடைய உறவுகள் கிட்டத்தட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கு அதிகமான நாட்களாப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். 

ஐ.நா. சபையில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் தமிழின அழிப்புக்கு அவர்கள் பொறுப்புப்கூற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப்பொறுப்பு கூறவேண்டும். தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில் இன அழிப்பினுடைய உச்சமான போரின் கடைசி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஆனால், இவர்கள் எதுவித பிரச்சினைகளும் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். ஆகவே, உலகத் தமிழினமும் உலகத்திலே நீதியை எதிர்பார்க்கின்ற ஒவ்வொருவரும் இவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

அதாவது ஐ.சி.சி. எனச் சொல்லப்படுகின்ற சர்வதேச நீதிமன்றத்துக்கு சர்வதேச நீதிபொறிமுறைகளுக்கும் முன்பாக இவர்கள் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.

எந்த நாட்டிலே இவர்கள் இருக்கின்றார்களோ அந்த நாட்டிலே இவர்கள் கைதுசெய்யப்படுவது மாத்திரமல்ல அவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். 

உலகத்திலே செய்யப்பட்ட யூகோஸ்லாவியாவில் முன்னாள் அதிபராக இருந்த மிலோஸவிக் இப்படியான கொடூரத்தைச் செய்தமைக்காக ஐக்கிய நாடுகள் அல்லது பல்நாட்டு நீதிப் பொறிமுறையின் பின்னர் தன்னுடைய பதவிக் காலத்தின் பின்னர் நிறுத்தப்பட்டார். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர்களோடு கூட்டிணைந்தவர்கள் எந்த இடத்திலாவது கைதுசெய்யப்பட்டு நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post