ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார்.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகியவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்டகால அரசியல் தொடர்பில் இருந்து வருகின்றேன். அவரைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன். அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க தனி ஒருவராக நாடாளுமன்றம் வரவில்லை. ஏதோ ஒன்று சாதித்துக் காட்ட வேண்டும் அல்லது தன்னுடைய கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தவிர அவர் வெறுமனே நாடளுமன்றத்துக்கு வரவில்லை.
தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் பாதுகாப்பதற்காகவே வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகக் கருதுகின்றேன். மாறாக அவர் வருகை தந்தமையானது ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கே ஆகும். பஸில் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய மூன்று ராஜபக்சக்களையும் அவர் தற்போது விரட்டியடித்துவிட்டு பதில் ஜனாதிபதியாக அமர்ந்திருக்கின்றார்.
இன்று வரை பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நாளை இடைக்கால ஜனாதிபதியாகவும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
நாளை நடைபெறவிருக்கின்ற இடைக்கால ஜனாதிபதித் தேர்தலின்போது அவருக்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பது உறுதியாகி இருக்கின்றது. அதற்கான பிரகாசமான வெளிப்பாடு தென்படுகின்றது.
நாளை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து உறுப்பினர்களும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்றிரவுக்குள் அறிவிக்கப்படும்" - என்றார்.
Post a Comment