சஜித் பிரேமதாசவுக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பான கலந்துரையாடல் இறுதி உடன்பாடு இன்றி நிறைவடைந்தது.
டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தங்களுக்கு மிகவும் நெருக்கமான சிலருடன் கொழும்பில் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கும் பிரதமர் சஜித்துக்கும் இடையில் ஒருமித்த கருத்துடன் டலஸ் போட்டியிட்டால் குறைந்தது 135 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக புள்ளிவிபர ஆதாரங்களுடன் டலஸின் பிரதிநிதிகள் காட்டியுள்ளனர்.
மும்முனை போட்டி ஏற்பட்டால் சஜித்-ரணில்-டல்லஸ் ஆகிய மூவரில் எவருக்கும் 50% வாக்குகள் கிடைக்காது எனவும் வெற்றியாளர் இரண்டாவது விருப்பத்தின் பேரில் தீர்மானிக்கப்படும் எனவும் அந்த அணி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளில் திருப்தியடையவில்லை எனவும், அவர் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகவும் டல்லஸின் பேச்சாளர் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
சஜித் பிரேமதாசவுக்கு இதுவரையில் இருந்த மிகப் பெரிய செல்வாக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையிலான பொதுவான உடன்படிக்கைக்கான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் இன்று இரவு மீண்டும் கூடவுள்ளனர்.
இதேவேளை, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் 11 கட்சிகள் கொண்ட கூட்டணியின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்க இன்னும் சில மணித்தியாலங்களே உள்ளன.
நாளை மறுதினம் 20ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
அதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோர் இப்போதே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பாரிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவு டலஸ் அழகப்பெருமுக்கு வழங்கப்படும் என அதன் தலைவர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Post a Comment