காரைநகர் - வலந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இனிமேல் எரிபொருள் அட்டைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்று காரைநகர் பிரதேச செயலகத்தில் இன்று (11) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச செயலகம், காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் மற்றும் காரைநகர் பிரதேச சபை என்பவை இணைந்து நடத்திய கூட்டத்திலேயே மேற்படி முடிவெடுக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
காரைநகர், ஊர்காவற்றுறை, சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
ஒரு நாளில் (அரச பணியாளர்கள் உட்பட) மோட்டார் சைக்கிள்கள் 800, முச்சக்கர வண்டி மற்றும் கார்கள் 300 என்ற எண்ணிக்கையில் பெற்றோல் விநியோகிக்கப்படும்.
வாகனங்களுக்கு வரிசை இலக்கம் (டோக்கன்) வழங்கப்படும். இதன்போது வரிசையில் காணப்படும் வாகனங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இலக்கம் வழங்கப்படும் போது எரிபொருள் அட்டை கட்டாயமாக வைத்திருக்கவேண்டும்.
வாகனங்களுக்கான வரிசை இலக்கம் வழங்கப்படும்போது வாகன இலக்கம் பதிவுசெய்யப்படும். முறைகேடுகளைத் தடுப்பதற்கு இது உதவும்.
அனைத்து அரச திணைக்களங்களையும் சேர்ந்த அத்தியாவசிய சேவைக்கு உரியவர்களுக்கு மாத்திரம் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் விசேட வரிசை இலக்கம் (விசேட டோக்கன்) வழங்கப்படும்.
பெற்றோலுக்கு மொத்தமாக மூன்று வரிசை பேணப்படும். (மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், விசேட வரிசை)
டீசல் வாகனங்களுக்கு தனி வரிசை பேணப்படும். (நீர் விநியோக வாகனங்கள், வர்த்தகர் சங்க வாகனங்கள், ஏனைய வாகனங்கள்)
குடிதண்ணீர் விநியோக வாகனங்களுக்கான டீசல் அளவை பிரதேச சபை தீர்மானித்து வழங்கும்.
-போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதேவேளை, இதுவரை எரிபொருள் வந்துசேராத நிலையில் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் நேற்று (10) முதல் வரிசையில் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் எப்போது வரும் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
Post a Comment