ராஜபக்சக்களை விட ரணில் அரசு மோசம்! - மறைமுகமாகச் சாடுகின்றார் சஜித் - Yarl Voice ராஜபக்சக்களை விட ரணில் அரசு மோசம்! - மறைமுகமாகச் சாடுகின்றார் சஜித் - Yarl Voice

ராஜபக்சக்களை விட ரணில் அரசு மோசம்! - மறைமுகமாகச் சாடுகின்றார் சஜித்



"மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் முன்னாள் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"புதிய ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்ட மறுநாள் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை நிலைநாட்டும் அதேவேளையில், நாடாளுமன்றக் குழு முறைமையின் ஊடாக அரசின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக நான் சுட்டிக்காட்டினேன். 

சர்வகட்சிகளும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சி இதுவே. அதை விடுத்து சர்வகட்சி ஆட்சி என்பது அமைச்சுப் பதவிகள் பெற்று வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெற்று நாடக அரங்கேற்றங்களை மேற்கொள்வதல்ல.

நாடாளுமன்றத்தில் 225 பேரும் ஒரே மாதிரி என்ற நிலைப்பாடு பொருத்தமல்ல. அது 134 என்பதே சரியானது.

மக்கள் சக்திக்கு முன்னால் அரசு தோற்கடிக்கப்படும் என்பது உறுதி. அதன் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொது உடன்பாட்டை உருவாக்க வேண்டும்.

அனைத்து வெகுஜன தொழிற்சங்கங்க அமைப்புகள்,தொழிற்சங்கங்கள், சிவில் சமூக  அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் திட்டவட்டமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும். அதற்காகத் தேசிய பேரவை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்த இடமளிக்கின்றேன். தேசிய சபைக்கு வரும் முற்போக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

நடந்தது ஒரு ஜனாதிபதித் தேர்தல் அல்ல. இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பே உண்மையில் இடம்பெற்றது. நாட்டில் மக்கள் அபிப்பிராயம் முற்றாகத் திரிபுபடுத்தப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தின் நிலைமை அவ்வாறானதாக இல்லை என்பதை முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் அதற்கு நாம் முகம் கொடுக்க முன்வந்தோம்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post