யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளது.
க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கலைப் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்வர்களில் சுமார் 50 மாணவர்கள் இந்து கற்கைகள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வியாண்டுக்காகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வே எதிர்வரும் 27 ஆம் திகதி, புதன்கிழமை காலை அறிமுக வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து கற்கைகளுக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் 2019 ஆம் ஆண்டே அதற்கான அங்கீகாரம் கிடைத்தது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக அப்போதைய நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்பமிட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட 2115/5 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் யாழ். பல்கலைக்கழகத்தின் 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் ஸ்தாபிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் செயற்படத் தொடங்கியது. அதன் முதலாவது பீடாதிபதியாக கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் கலைப்பீடத்திடன் இணைக்கப்பட்டிருந்த இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாக இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்று நிறுவப்பட்டு, மாணவர்கள் கற்றுத் தேற வேண்டுமென்பது வள்ளலார் சேர். பொன். இராமநாதனின் கனவுகளில் ஒன்றாக இருந்ததெனவும், தற்போது முதலாவது மாணவர் உள்வாங்கலின் மூலம் அவரது கனவு மெய்ப்படுகிறதெனவும் மூத்த கல்வியியலாளர்களும், அறிஞர்களும் மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Post a Comment