நாட்டில் இல்லாத பயங்கரவாதம் இல்லாத ஒரு தீவிரவாதம் மீண்டும் உருவாகுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் துணை நிற்கிறார்கள் என்றால் அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் கரும்புலிகள் தினத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாமென தகவல் வெளியானது. இதனையடுத்து வடக்கு கிழக்கிலுள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள், பிரதிநிதிகள் அன்றைய தினமும் அதற்கு முதல் நாளும் பின்தொடரப்பட்டனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்
அனுரகுமார திசாநாயக்க
எந்த அடிப்படையில் இந்த தகவல் வந்தது என்று கேள்வி எழுப்பியபோது அதற்கு சரியான பதிலை இந்த அரசாங்கம் வழங்கவில்லை.
தமிழ் மக்களின் செயற்பாடுகளையும் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையே இதுவாகும். கடந்த முள்ளிவாய்க்கால் தினத்தில் கூட இவ்வாறான ஒரு குண்டு தாக்குதல் இடம் பெறலாம் என ஒரு தகவல் பரப்பப்பட்டது. இதனை வெறும் தகவலாக தமிழர் தரப்பு எடுத்துக் கொள்ள கூடாது.
தென்னிலங்கையில் நடைபெறுகின்ற பொருளாதார பிரச்சினை ஆட்சி மாற்றங்களின் பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நான் மீண்டும் மக்களுக்காக வருவேன் என கூறியிருந்தார். அவரது நோக்கம் என்னவாக இருக்கின்றது. மக்களின் எதிர்ப்பின் ஊடாக தனது பதவியை ராஜினாமா செய்த ஒருவர் எந்த அடிப்படையில் இந்த நம்பிக்கை அவரிடம் காணப்படுகின்றது.
தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வாறு ஆட்சிக்கு வந்தார்கள் என்பது அனைவரும் தெரியும். தென்னிலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை கைப்பற்றி இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனுடைய விசாரணைகள் இன்னும் முழுமை அடையவில்லை. அந்த அடிப்படையில் தங்களுடைய ஆட்சியை தக்க வைப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றார்களா என்று சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
இந்த நாட்டில் இல்லாத பயங்கரவாதம் இல்லாத ஒரு தீவிரவாதம் மீண்டும் உருவாகுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் துணை நிற்கிறார்கள் என்றால் அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
இந்த நிலை தொடருமாக இருந்தால் தமிழ் இளைஞர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள். தென்னிலங்கையில் இவ்வாறு ஏதாவது தாக்குதல் இடம்பெற்றால் தமிழ் செயற்பாட்டாளர்களும் தமிழ் இளைஞர்களுமே பலிக்கடாவாக்கப்படுவர்.
இவ்வாறு வெளியிடப்படும் தகவலின் பின்னணி, அதன் உண்மைத்தன்மை என்ன இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை ஆராய வேண்டும் என்றார்.
Post a Comment