புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் தங்களுக்கு ஆதரவு கோரி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசி கூட்டமைப்பின் ஆதரவைக் கேட்டார் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நேற்று மாலை சம்பந்தனின் இல்லத்துக்கு நேரில் சென்று சம்பந்தனோடு நீண்ட நேரம் கலந்துரையாடி கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார்.
சஜித்துடனான இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய ஜனாதிபதித் தெரிவு தொடர்பில் நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
கூட்டத்தின் நிறைவில், "ஜனாதிபதித் தெரிவுக்கான வேட்புமனு நாடாளுமன்றத்தில் நாளை (இன்று) தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்பின்னர் நாளை (இன்று) மாலை மீண்டும் கூடி எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் முடிவெடுப்போம்" என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதித் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த தீர்மானத்தைப் பல கட்சிகள் இன்னும் எடுக்கவில்லை.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இன்று மாலை இது குறித்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளன என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வாக்கெடுப்பைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர்.
Post a Comment