யாழ் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
வாகனம் ஒன்றிக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை என்ற அடிப்படையில் இவை விநியோகிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்;
யாழ்ப்பான மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் விநியோகம் தொடா்பான அறிவித்தல்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கும் கிடைக்கப் பெறும் குறைந்தளவிலான எரிபொருளினை பங்கீட்டு முறையிலேயே வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் எரிபொருள் விநியோக அட்டை முறைமை ஒன்று ஏற்கனவே மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோக்கப்பட இருப்பதனால் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோா் இவ் அட்டையினை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவ்விடயம் தொடர்பில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
✔ பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோக அட்டையினை (வெள்ளை நிறம்) தாங்கள் வதியும் கிராமஉத்தியோகத்தரிடமும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தமது திணைக்களத் தலைவரினுடாகவும் (சுகாதார சேவை – பிங் நிறம், ஏனையோர் – நீல நிறம்) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
✔ ”வாகனம் ஒன்றிக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை” எனும் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
✔ வாகன உரிமை தொடர்பில் அது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ( கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத பிள்ளைகள்) காணப்படின் குடும்ப உறுப்பினா் எவரேனும் ஒருவர் எரிபொருள் விநியோக அட்டைக்காக பதிவினை மேற்கொள்ள முடியும்.
✔ வாகன உரிமை குடும்ப உறுப்பினர் அல்லாத எவரேனும் பெயரில் காணப்படின் முறையான ஆவணங்களை பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து பதிவினை மேற்கொள்ள முடியும்.
✔ நபர் ஒருவர் வாகனம் ஒன்றிக்கான எரிபொருள் விநியோக அட்டை பதிவினையே தனது பெயரில் மேற்கொள்ள முடியும். எனினும் வணிகம் அல்லது வாழ்வாதார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந் நிபந்தனை பொருந்தாது.
✔ தங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தாங்களே தெரிவு செய்து கொள்ள முடியும். எனினும் ஏதேனும் நிலைமைகளில் எரிபொருள் கிடைக்கப்பெறும் நிலையங்களின் அடிப்படையில் தற்காலிகமாக வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் உரிய தரப்பினரால் தங்களுக்கு வழங்கப்படும்.
✔ மேற்படி அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் இடர்பாடுகள் காணப்படுமாயின் உடனடியாக பிரதேச செயலங்களை நாடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்
இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு அனைவரும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
Post a Comment