121 உறவுகளையும் அரசே சாகடித்தது! - கூட்டமைப்பு குற்றச்சாட்டு - Yarl Voice 121 உறவுகளையும் அரசே சாகடித்தது! - கூட்டமைப்பு குற்றச்சாட்டு - Yarl Voice

121 உறவுகளையும் அரசே சாகடித்தது! - கூட்டமைப்பு குற்றச்சாட்டு

 

"காணாமல்போன தமது  உறவுகளைத் தேடித் போராடிய உறவுகளில் 121 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சாதாரண மரணமல்ல. இதுவும் அரசின் ஒரு படுகொலைதான். ஏனெனில் உறவுகளை வீதிகளில் இறங்கிப் போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
   
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

"காணாமல்போன தமது  உறவுகளுக்காக 2000 நாட்களைக் கடந்து அவர்களின் உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். 

நாம் சபையில் பதாகைளுடன் எழுந்தவுடன் ஒளிப்பதிவு நிறுத்தப்படுகின்றது. நாங்கள் பதாகைகளைப் பிடித்தால் திட்டமிட்டு நீங்கள் உடனடியாக இது புலிகளுக்கான அஞ்சலி எனப் பிரசாரம் செய்கின்றீர்கள். சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகள் கூட நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பேச்சுச் சுதந்திரத்திலிருந்து - கருத்து சுதந்திரத்திலிருந்து மறுக்கப்படுகின்றார்கள்; தடுக்கப்படுகின்றார்கள். இதற்கும் எமக்கு நீதி வேண்டும்.

தமது காணாமல்போன உறவுகளுக்காக  2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி  அந்த மக்கள் வீதிகளில் தொடங்கிய போராட்டமானது 2000 நாட்களைக் கடந்து 121 பெற்றோர்களை - உறவுகளை இழந்து முன்னெடுக்கப்படுகின்றது. அந்தப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்தச்  சபையில் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.

உயிரிழந்த 121 பேரும் போராட்டக்களத்தில் இருந்தவர்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணித்துள்ளனர். இந்த மரணங்களைச் சாதாரணமாக விட்டுவிட முடியாது. இந்த மரணங்களும் இந்த அரசினுடைய படுகொலைப் பட்டியலில் வரவேண்டிய விடயம். 121 உறவுகளும் மரணிக்கவில்லை. கொல்லப்பட்டார்கள். அவர்களை வீதிகளில் இறங்கிப் போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post