யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி கால செயற்பாடுகள் மற்றும் உள்ளக நிலவரங்களை ஆராயும் விதமாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் விஜயமொன்றை இன்று (17.08.2022) மேற்கொண்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. T சத்தியமூர்த்தி அவர்களை சந்தித்த அவர், வைத்தியசாலை நிலமைகளை ஆராய்ந்ததோடு, வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இதன்போது வைத்தியசாலை எதிர்கொள்ளும் இடப்பற்றாக்குறை, நோயாளர் விடுதிகளின் விஸ்தரிப்பு, மேலதிக சிகிச்சை மையங்களின் தேவைகள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வசதிகள் தொடர்பாக பணிப்பாளரால் எடுத்துரைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்கு தேவையான இணைந்த சேவைகளை வழங்கும் மையங்களை உருவாக்குதல், வைத்தியசாலையின் உள்ளக மற்றும் வெளியக விஸ்தரப்பு பணிகள் என்பன எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான பூர்வாங்க பணிகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் உரையாடப்பட்டன.
மேலும், வைத்தியசாலைக்கு அண்மித்துள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் கோரிப்பெற்று, புலம்பெயர் கொடையாளிகளின் உதவியோடு வைத்தியசாலைக்கு தேவையான பிரிவுகளை அமைக்க முடியும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், யாழ் நகரப்பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டமொன்றை, போதனா வைத்தியசாலைக்கு பயன்சேர்க்கும் வகையில் முன்னெடுப்பது தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. இதுதொடர்பான திட்டமுன்மொழிவை உருவாக்கும் நோக்கில் முத்தரப்பு சந்திப்பொன்றை விரைவில் நடாத்த தீர்மானித்துள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், ஆளணியை அதிகரிப்பது தொடர்பிலும் உரையாடப்பட்டதுடன், இலங்கை தாதியர் சேவையில் 95% பெண்கள், 5% ஆண்கள் என்ற ஆட்சேர்ப்பு வீதத்தில் கொள்கைரீதியான மாற்றம் கொண்டுவரப்படுகையில் ஆண் தாதியர்களை அதிகமாக சேவையில் உள்ளீர்க்க முடியும் எனவும் இச்சந்திப்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாண மக்களுக்கு பல்வேறுபட்ட நெருக்கடி காலங்களிலும், இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றிவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்குத் தேவையான உதவிகளை செய்துவரும் உள்ளூர் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளிகளுக்கு இச்சந்திப்பின்போது வைத்தியசாலை பணிப்பாளரிடம் அங்கஜன் இராமநாதன் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
Post a Comment