* சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு எனத் தெரிவிப்பு
* புதிய அரசமைப்பு, அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு
"நாட்டில் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஜனாதிபதியின் அழைப்புக்கு இணங்க அவரைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சுகவீனம் காரணமாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, தவராசா கலையரசன் எம்.பியும் இதில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.
மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கையில்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி கூறிய விடயங்களை நான் அப்படியே ஜனாதிபதியிடம் கூறினேன்.
அதற்கமைய சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தேன்.
தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
அரசமைப்பின் 22ஆவது திருத்தம், புதிய அரசமைப்பு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் இதன்போது பேசினோம்.
உடனடிப் பிரச்சினைகள் சம்பந்தமாகப் பேசும்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தோம். இந்தக் கோரிக்கையைத் தான் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரினோம். அதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
காணி விவகாரம் தொடர்பிலும் பேசினோம். வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறும் கோரினோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்" - என்றார்.
Post a Comment