சைபர் போர் குறித்து படையினர் விழிப்பாகவே இருக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து - Yarl Voice சைபர் போர் குறித்து படையினர் விழிப்பாகவே இருக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து - Yarl Voice

சைபர் போர் குறித்து படையினர் விழிப்பாகவே இருக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் வலியுறுத்து



"தரை, வான், கடல் மாத்திரமன்றி எதிர்காலத்தில் சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே, எமது படையினர் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்."

- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி, அறிவு ஆகியன அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது எனவும் கூறினார். 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்கும் நிகழ்வில் இன்று பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழகக் கொடி வர்ணங்களுக்கு சர்வமத ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரை நிகழ்த்தியதுடன் ஜனாதிபதி வர்ணமும் பல்கலைக்கழக வர்ணமும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு வழங்கி வைத்தார்.

பின்னர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் விசேட உரை நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழக கொடி மற்றும் வர்ணங்களையும் வழங்கிவைத்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல வளாகத்தில் உள்ள நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.

ஜனாதிபதிக்கு இங்கு விசேட நினைவுப் பரிசு ஒன்று கையளிக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறிதாவது:-

“இன்று சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உங்கள் திறமை வெளிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டகாலத்தில் போராடிய பல அதிகாரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். எனவே, இந்தப் பல்கலைக்கழகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும், திறமையான அதிகாரிகளை நமது இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

இந்தப் பல்கலைக்கழகம் மிகவும் முக்கியமானது. ஒரு இராணுவத்தை வழிநடத்த வேண்டுமானால், அது இராணுவம் தலைமையைப் பொறுத்துள்ளது. மேலும், அந்த இராணுவத்துக்கு ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் இல்லாமல் இராணுவம் முன்னேற முடியாது. ஒரு இராணுவம் ஒழுக்கத்துடன் மட்டுமே முன்னேற முடியும். இராணுவத்தை ஒழுக்கத்தால் மட்டும் வழிநடத்த முடியாது.

ஒழுக்கத்துடன் பயிற்சியும் தேவை. ஒரு இராணுவம் ஒழுக்கமும் பயிற்சியும் பெற்றாலும் வெற்றியடைய முடியாது. அந்த இராணுவத்துக்கு அறிவு இருக்க வேண்டும்.

இராணுவ அறிவு மற்றும் பிரதேச அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவுடன் வெற்றி கிடைக்கும். இங்குள்ள தலைவர்களுக்கு ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு கொடுக்கப்படுகின்றது. அங்கிருந்து, இராணுவம் அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. சிலர் இராணுவத் தளபதிகளாக மாறுகின்றார்கள். மற்றவர்கள் இந்தப் பட்டத்துடன் பல்வேறு துறைகளில் சென்று சேவை செய்கிறார்கள்" - என்றார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய
பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post