"மக்களிடமிருந்து என்னை எவரும் பிரித்தெடுக்கவே முடியாது. நான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பேன். எனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி."
- இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நிபந்தனையுடனான பொது மன்னிப்பின் கீழ் இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய அவருக்குச் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள். எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
நான் எவருக்கும் பயந்து அடிமையாக இருக்கமாட்டேன். மக்களிடமிருந்து என்னை எவரும் பிரித்தெடுக்கவே முடியாது. நான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பேன்.
நான் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.
இந்த நாட்டின் அப்பாவி மக்களை வதைத்து - நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக எனது நடவடிக்கைகள் தொடரும்" - என்றார்.
Post a Comment