"மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் காலத்தைக் கடத்துகின்றன. இதை இனியும் அனுமதிக்க முடியாது."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'உதயன்' பத்திரிகையிடம் நேற்றிரவு (27) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"நாங்கள் அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக அரசுடன் மாத்திரமன்றி ஏனைய தரப்புக்களுடனும் பேசியிருக்கின்றோம். இது தொடர்பான எமது நடவடிக்கை தொடர்கின்றது. நாட்டின் தேசிய பிரச்சினைகளில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
வடக்கு - கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சரித்திர ரீதியான தாயகம். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் அவர்களின் வதிவிடப் பிரதேசம். எனவே, தமிழ்பேசும் பிரதேசம் ஒன்றிணைந்த வடக்கு - கிழக்கில் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
இந்தக் கருத்து எல்லோராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு - வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், அது சில காரணங்கள் நிமித்தம் இழுபடுகின்றது.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இந்த விடயம் தொடர்பில் காலத்தைக் கடத்துகின்றன. இதை இனியும் அனுமதிக்க முடியாது.
காலம் தாழ்த்தாமல் தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் தொடர்ந்து பேசுவோம். இந்த விடயத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்" - என்றார்.
Post a Comment