நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே யாழ் மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது. ஒகஸ்ட் 25ஆம் திகதியன்று தேர்த்திருவிழாவும் 26ஆம் திகதியன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் பக்தர்கள் தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.
திருட்டுச் சம்பவங்களை தவிர்க்க நல்லூர் ஆலயச்சூழலில் யாழ் மாநகர சபையினால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவு செய்துள்ள சம்பவங்கள் சில இனங்காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் திருவிழாக்களின் போது ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளிகளை பதிவு செய்தால் சில வேளைகளில் ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
நல்லூர் ஆலயப்பகுதியை சூழ உள்ள கட்டுப்பாடுகள் வீதி தடைகள் தொடர்ந்தும் காணப்படும். அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடியவர்கள் அங்க பிரதிஷ்டை செய்யும் ஆலய சுற்றுப்பகுதிகளில் ஒருசிலர் கச்சான் கோது , மிகுதி உணவுடன் வீசப்பட்ட பைகள் என்பன மணலில் போட்டுவிட்டு காணப்படு
செல்வதனால் சுத்தம் செய்யும் போது சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே இதனை தவிர்க்க வேண்டும்
யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள்
என்றார்.
Post a Comment