யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழியல் மற்றும் தமிழிசை வளரச்சிக்கென சிங்கப்பூர் எஸ்றேற்றர் கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறையினால் நடாத்தப்பட்ட மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு ஆகஸ்ட்03ஆம் திகதி, புதன்கிழமை யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையாரங்கில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எம். இரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆசியுரையையும், கலைப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர் மற்றும் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் சிறப்புரைகளையும் நிகழ்த்தினர்.
யாழ். பல்கலைக் கழக கலைப்பீடத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி சி. சிவலிங்கராஜா திறப்புரையாற்றி ஆய்வரங்கில் திறந்து வைத்தார்.
“ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த இவ் ஆய்வு மாநாட்டில் முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் துணைவேந்தரும், வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சு. மோகனதாஸ், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழியலுக்குத் தொண்டாற்றிய மூத்த தமிழ்ப் புலமையாளர்களான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் , செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்து, திருமதி மங்கையற்கரசி நடராசா ஆகியோர், அவர்களின் அரும்பணியைப் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment