தியாக தீபத்தின் இறுதிநாள் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு..! த.தே.ப.பே.நிஷாந்தன் - Yarl Voice தியாக தீபத்தின் இறுதிநாள் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு..! த.தே.ப.பே.நிஷாந்தன் - Yarl Voice

தியாக தீபத்தின் இறுதிநாள் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு..! த.தே.ப.பே.நிஷாந்தன்



தியாக தீபம் திலீபனுடைய இறுதிநாள் நிகழ்வுகளில் அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

தியாக தீபம் திலீபன் அண்ணனுடைய முப்பத்தி ஐந்தாவது நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகத்தில் மக்கள் எழுச்சியாக  தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

தியாக தீபம் திலீபன்  அவர்களுடைய இறுதி  நினைவேந்தல் நிகழ்வுகளை இம்முறை பொது கட்டமைப்பின் ஊடாக நடாத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து  நிகழ்வு ஏற்பாட்டுகள் நடைபெறுகின்றன.

இந்த பொதுக் கட்டமைப்பில் அனைத்து தமிழ்த் தேசியத்திற்கான பொது அமைப்புகள், மதகுருமார் ஒன்றியங்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், என பலதரப்பட்டவர்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக பின்னணியிலிருந்து தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இந்த இறுதி இரண்டு நாட்களும் அதாவது நாளையும் நாளை மறுதினமும் இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்த வகையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் திலீபன் அவர்களுடைய   நினைவாலயத்திற்கு அருகாமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை  8 மணி முதல் மாலை 5 மணி வரை
அடையாள உண்ணாவிரதம் ஒன்றை நடாத்துவதற்கு பொதுக் கட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் பொது கட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்த அடையாள உண்ணாவிரதத்தில் எமது தமிழ் உறவுகள் அனைவரும் பங்கெடுத்து உங்களது தார்மீக கடமையினை நிறைவேற்ற வேண்டும்.

அதேபோன்று மறுநாள் திங்கட்கிழமை இறுதி நாள் அன்று தியாக தீபம் திலீபன் அண்ணனுடைய சொந்த இடமான ஊரரெலுவில் காலை 8 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து வாகன ஊர்தி பயணம் ஆரம்பமாகி 10 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள அண்ணனின் நினைவாலயத்தை வந்தடையும்.

இந்த ஊர்திப் பயணத்தில் ஏனைய அமைப்புக்களின் ஊர்திகளும் பங்கெடுத்துக் கொள்ளும் ஆகவே இந்த இறுதி நிகழ்விலும் எமது தேசத்து தமிழ் உறவுகள் அனைவரும், குறிப்பாக  விடுதலைப் போராளிகள், பல்கலைக்கழக மாணவ சமூகங்கள், பாடசாலை மாணவர்கள், வர்தக சங்கத்தினர், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என  அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளச் வேண்டும்.

இவ்வாறு அனைவருமாக பங்கெடுத்து இம்முறை திலீபன் அவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை ஒற்றுமையாக எழுச்சி பூர்வமாக உலகிற்கு பறைசாற்றும் விதத்தில்  உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க அனைவரையும் ஒன்று திரளுமாறு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அழைப்பு விடுக்கின்றதாகவும் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post