திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள் எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம்!! ஐங்கரநேசன் ஆதங்கம் - Yarl Voice திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள் எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம்!! ஐங்கரநேசன் ஆதங்கம் - Yarl Voice

திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள் எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம்!! ஐங்கரநேசன் ஆதங்கம்



திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் மங்கள் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தியாக திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எந்நாளும் நினைவுகூரப்படவேண்டியவர்கள். இது வெறுமனே நினைவுகளை மனத்திரையில் மீட்கும் சடங்குகள் அல்ல. மாறாக, அவர்களின் போராட்ட நியாயங்களையும் போராட்டத் தியாகங்களையும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துகின்ற உயிர்ப்பான அரசியற் செயற்பாடுகளுமாகும்.

அரசியற் காரணங்களுக்காகப் போராடி மடிந்தவர்களின் நினைவேந்தல்களில் அரசியல் நீக்கம் செய்வது அவர்களின் போராட்ட நியாயங்களைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இத்தகைய நினைவேந்தல்களில் இனத்துவ அரசியலைத் தாண்டிக் கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களைச் சூறையாடுவதாகும். ஆனால், துரதிர்ஷ்டமாகத் தமிழ்த்தேசிய அரசியற் களத்தில் இன்று இவையே அதிகம் நிகழ்ந்தேறுகின்றன. 

நினைவேந்தல் குழப்பங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கும் அப்பால் இவை நிகழ்ந்திருக்கவே கூடாது என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வேதனைக் குரலாக உள்ளது. கட்சி வேறுபாடுகள் தாண்டிப் பேரினவாதிகள் ஒன்றுபட்டு நினைவேந்தியவர்களைக் கைதுசெய்யுமாறு கொக்கரிக்கிறார்கள். ஆனால், நாமோ பொது நினைவேந்தல்களிற்கூட ஒன்றுபட முடியாமல் தமிழ்த்தேசியத்தை மழுங்கடித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post