"போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பி வீட்டுக்குள் இருக்கின்றார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அரசு வன்முறையைப் பிரயோகித்து அவர்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு அவர்களைச் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வருகின்றது."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை எதிர்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், அரசு அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றது.
எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும்போது நாட்டு மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள். மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் தற்போது சந்தர்ப்பவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஒருபோதும் பங்கேற்காது.
மத்திய வருமானம் கொண்ட நாடாகவே ஆரம்பத்தில் எமது நாட்டைக் கூறினர். தற்போது எமது நாடு குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலிலேயே இணைக்கப்பட்டுள்ளது.
பாணின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. மின்கட்டணம், நீர்க்கட்டணம் என அனைத்துக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மண்ணெண்ணெய்யின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது" - என்றார்.
Post a Comment