"பயங்கரவாதியான திலீபனை நினைவேந்தி வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நிகழ்வுகளைப் பகிரங்கமாகப் பெருமெடுப்பில் நடத்துகின்றனர். ஆனால், அதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசும், படையினரும், பொலிஸாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்."
- இவ்வாறு சாடியுள்ளார் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.
"திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிரிழந்தாலும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மறக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழினத்தின் விடிவுக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு நேற்று தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் இம்முறை மக்கள் கூடுதல் அக்கறை காட்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை எழுச்சிபூர்வமாக நடத்தினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறுகையில்,
"திலீபனின் இந்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கருத்து என்ன?
வடக்கு, கிழக்கில் இம்முறை திலீபனின் நினைவேந்தலைப் பெருமெடுப்பில் நடத்த யார் அனுமதி வழங்கியது? இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதா?
பயங்கரவாதிகளின் மோசமான செயல்களால்தான் எமது நாடு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சின்னாபின்னமாகியது. மீண்டும் அதே நிலைமை ஏற்பட அரசு விரும்புகின்றதா?
எதிர்வரும் காலங்களில் வடக்கு, கிழக்கில் புலிப் பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்வுகளுக்கு அரசு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும்" - என்றார்.
Post a Comment