"ராஜபக்சக்கள் போல் போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழர்கள் உள்ளிட்ட மூவின மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவதுதான் ரணிலின் திட்டம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எனினும், மக்களை ஏமாற்றும் திட்டம் எதுவும் இனிமேல் வேகாது என்பதை ரணில் - ராஜபக்ச சதிகாரக் கும்பம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும், தேசிய பிரச்சினைகளுக்கும் அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என நான் நம்புகின்றேன்' - என்று கடந்த வாரம் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ரணில் - ராஜபக்ச அரசுக்குத் தேர்தல் ஒன்றின் மூலம் முடிவுகட்ட நாட்டு மக்கள் தயாராகவுள்ளனர். ஆனால், தோல்வி உறுதி என்பதால் தேர்தலை நடத்தாமல் காலத்தைக் கடத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.
தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ஐக்கிய மக்கள் சக்தி தலையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெற்றிவாகை சூடும்.
எமது ஆட்சியில் ஓரிரு மாதங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளைக் காண்போம்" - என்றும் சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.
Post a Comment