முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி பதவியைத் துறந்தமையால் கோட்டாபய ராஜபக்ச விடுபாட்டுரிமையை – சிறப்புரிமையை இழந்துள்ளார். அவரை நீதியின் முன்நிறுத்தவேண்டும் என்று கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகித்தவர்களில் ஒருவரான இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாவை ஏற்றுக்கொள்வதற்கு எந்த நாடும் தயாரில்லாத காரணத்தால்தான் அவர் நாடு திரும்பினார் என்று தெரிவித்துள்ள ஜோசப் ஸ்டாலின் அவர் மறைந்திருப்பதற்கு எங்கும் இடமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
22 மில்லியன் மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியமைக்காக அவரைக் கைது செய்யவேண்டும் என்றும், அவர் இழைத்த குற்றங்களுக்காகத் தண்டிக்கவேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையால் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும், தற்போது அவர் சிறப்புரிமையை இழந்துள்ளமையால் அந்த வழக்குகளில் அவர் மீளவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment