"இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எந்த நாடுகளுடனும் நாம் பகைக்கவும் விரும்பவில்லை. ஒரு நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் நடக்கவும் விரும்பவில்லை. அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம். ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
"இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் எந்த நாடும் எமக்கு இன்னமும் தெரியப்படுத்தவில்லை. இலங்கை மீது என்ன பிரேரணை வருகின்றது என்பதை அறிந்த பின்னர்தான் அது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. பிரிட்டன் தலைமையில் இது முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் தற்போதைய நிலைவரம், அதிலிருந்து மீண்டெழ நாம் எதிர்பார்க்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் - உதவிகள் தொடர்பில் மற்றும் இலங்கை மீதான கடந்த கால தீர்மானங்கள் தொடர்பில் ஜெனிவா அமர்வில் இலங்கை நிலைவரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது வெளிவிவகார அமைச்சர் அது தொடர்பில் தெரிவிப்பார்" - என்றார்.
Post a Comment