முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.
முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.
எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார்.
எனது அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Post a Comment