ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர், பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சினைச் சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சென்றவாரம் இனநல்லிணக்கம் சம்பந்தமான சர்வகட்சி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டமாக அமைந்திருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது. இதன்போது 5 பேரினை உடனடியாக விடுவிக்க கூடியதாக உள்ளதாகவும் மற்றவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சில முன்மொழிவுகளை வழங்கவுள்ளதாக சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
படையினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் பேசப்பட்டது. இதில் இராணுவம் சில நிலங்களை விடுவிப்பதற்கு பிரேரித்திருப்பதாகவும் இது தேசிய பாதுகாப்பு சபை ஜனவரி 3 ஆம் திகதி கூடியவுடன் அதன்முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள ஜனவரி 5 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை கூடி அரசியலமைப்பு விடயம் தொடர்பில் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment