இரண்டு நாள் பயணமாக இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான 4 நாள் பயணத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று கொழும்பை வந்தடைவார். கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார். இந்தச் சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருடன் தானும் பங்கெடுப்பார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தீர்வு தொடர்பில் அரசுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுக்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment