தமிழ்க் கட்சிகள் சில என்னை
பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது.
ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர்.
ஐனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும். அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள். ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொண்டோம்.
கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என கட்சியின் பெயரை தெரிவித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம். எனினும் சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.
எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் - என்றார்.
Post a Comment