பல்கலை மாணவர்களின் பேரணிக்கு ஆதரவு தருக.! சிறீதரன் எம்.பி கோரிக்கை - Yarl Voice பல்கலை மாணவர்களின் பேரணிக்கு ஆதரவு தருக.! சிறீதரன் எம்.பி கோரிக்கை - Yarl Voice

பல்கலை மாணவர்களின் பேரணிக்கு ஆதரவு தருக.! சிறீதரன் எம்.பி கோரிக்கை




இலங்கையின் சுதந்திரதினமான மாசி.04 ஆம் திகதியை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்  நாளை காலை 10.00 மணிக்கு யாழ்.பல்கலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்படும் "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய" எழுச்சிப்பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 

எமது இனத்தின் கனவுகளைச் சுமந்த இலட்சியப் பயணத்தின் நீட்சிக்கான படிமமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து முன்னெடுத்திருக்கும் எழுச்சிப் பேரணியானது நாளை காலை 10.00 மணிக்கு யாழ்பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்து எதிர்வரும் 2023.02.07 ஆம் திகதி மட்டுநகரைச் சென்றடையவுள்ளது. 

எமது மாணவர்களின் இப்பெருமுன்னெடுப்புக்கு சமூக, மத மற்றும் கட்சி பேதங்களற்று பேராதரவு வழங்கவேண்டிய காலக்கடமை நம் எல்லோருக்கும் உள்ளதை உணர்ந்து, தமிழ்த்தேசியப் பற்றுறுதி மிக்க எமது மக்கள் அனைவரையும் இவ் உணர்வெழுச்சிப் பேரணியில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். 

அதேவேளை, நாளை 2023.02.04 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகலில், பேரணி கிளிநொச்சியை வந்தடையும் நேரத்தில், கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டும் ஆதரவளிக்கும் அதேவேளை, எமது இனத்தின் இருப்பை நிலைநிறுத்துவது குறித்த சிந்தனையும், சிரத்தையும் மிக்க கிளிநொச்சிவாழ் உறவுகள் அனைவரும்  நாளை பி.ப.3.00 மணிக்கு கரடிப்போக்குச் சந்தியில் ஆரம்பித்து இரணைமடுச் சந்திவரை நீளும் எழுச்சிப்பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையோடு அழைத்து நிற்கிறேன். - என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post