நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள்; ரவிகரன் பொலிசில் முறைப்பாடு - Yarl Voice நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள்; ரவிகரன் பொலிசில் முறைப்பாடு - Yarl Voice

நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள்; ரவிகரன் பொலிசில் முறைப்பாடு



குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படக்கூடாது என்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பொலீசார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இவ்வாறு நீதிமன்ற கட்டளையை மீறி அங்கு பௌத்த கட்டுமானப்பணிகள் அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு நீதிமன்றக்கட்டளையை மீறி இடம்பெற்று வரும் பௌத்த கட்டுமானப்பணிக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

இவ்வாறு பொலிசில் முறைப்பாடு செய்தபின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் விகாரைக்குரிய கட்டுமானப்பணிகள் தற்போது முடிவுற்றிருப்பதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

குருந்தூர்மலைக்கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டபின்னரும்கூட அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ந்துமேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக 12.06.2022அன்று, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி கபோக் கல்லினால் ஆன புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், விசேட பூசைவழிபாடுகளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்த தேரர்களும், இராணுவத்தினரும், தென்னிலங்கையைச் சார்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தோம்.

அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக நாம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுமிருந்தோம். 

நாம் போலீசாரல் கைதுசெய்யப்பட்டு விடுதலையான பிற்பாடு, குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளை மீறப்பட்டுள்ளது என்ற விடயத்தினை நாம் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம்.

அதன்படி 19.07.2022அன்று இது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், குருந்தூர்மலைக்கும் நேரில் சென்று நிலமைகளைப்பார்வையிட்டதுடன், அன்றைய தினமே நீதிபதி கட்டளையொன்றையும் வழங்கியிருந்தார்.

அக்கட்டளையில்,12.06.2022 அன்று எவ்வாறு அந்தவிகாரையின் கட்டுமானப்பணிகள் காணப்பட்டதோ, அவ்வாறே இருக்கவேண்டும். அதற்குமேல் எவ்வித கட்டுமானப் பணிகளும் இனி மேற்கொள்ளக்கூடாதென உத்தரவிட்டிருந்தார்.

அதனைக் கண்காணிக்கும் பொறுப்பு பொலிசாரிடமும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது குருந்தூர்மலையில் கட்டுமானப்பணிகள் மிக வேகமாக இடம்பெற்று, பௌத்த விகாரை அங்கு முழுமையாக அமைக்கப்பட்டிருப்பதை நாம் காணக்கூடியதாகவிருந்தது.

ஆகவே நான் முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்திற்குச்சென்று, முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்திருந்தேன்.

குறிப்பாக நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன என்பதை முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதுடன்.

குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஜெயத்திலக என்பவரின் பெயரைக் குறிப்பிட்டதுடன், கல்கமுவ சாந்தபோதி தேரர், சப்புமஸ்கட குருந்தூர்மலை விகாரதிபதி ஆகியோரது பெயர்களைக்குறிப்பிட்டு முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளேன்.

அத்தோடு அங்கு தொடர்ச்சியாக பொலீசார் கடமையில் இருந்தும்கூட அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  எனவே பொலீசார் இதற்கு பெறுப்புக்கூறவேண்டும் என்ற வகையிலே பொலிஸ் தலமைப் பொறுப்பதிகாரி அமரசிங்விற்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளேன்.

எதிர்வரும் 02.03.2023 அன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு வருகின்றது. அப்போது இந்தவிடயத்தை எமது சட்டத்தரணிகளுக்கு தெரியப்படுத்தி, நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவிருக்கிறேன் - என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post