ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திருவாளர்.இரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள், மாரடைப்பால் இன்று உயிர் நீத்தார் என்ற செய்தி பெருவலியைத் தருகிறது.
யாழ்ப்பாணத்தின் இணுவில் பதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது தனிமனித உயர்ச்சியோடு இணைந்தே தன்சார் சமூகமொன்றின் இருப்புக்கும், உயர்வுக்குமாக காலப்பெரும் பணிகளை ஆற்றியதன் காரணமாக, இணுவை மண்ணின் அடையாளமாகவே இறுதிவரை வாழ்ந்திருக்கிறார்.
அரச கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும் அதிகம் நிறைந்திருந்த காலச்சூழலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து இவர் ஆற்றிய தமிழ்த்தேசியப் பணிகளும், அந்தப் பாதையிலேயே பயணப்படும் பலரை உருவாக்கி நெறிப்படுத்திய நெஞ்சுரமும், தன் இனம் மீதும் அதன் இருப்பின் மீதும் அவர் கொண்டிருந்த அதியுச்ச பற்றுதலின் வெளிப்பாடே ஆகும்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் கணிதத்துறைப் பேராசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றி, பின் துணைவேந்தர் பதவியை அலங்கரித்த இவர், யாழ் பல்கலையில் கல்விகற்று அங்கேயே துணைவேந்தராகப் பதவியேற்ற முதல்நபர் என்ற புதுவரலாற்றுப் போக்க்குக்கும் ஊற்றுக்காலாகியிருந்தார்.
தான் ஏற்றுக்கொண்ட எல்லாப் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றி, ஆற்றிய பணிகளின் அளவாலும் விளைவாலும், அவர் சார்ந்த அத்தனைபேரினதும் ஆழ்மனங்களில் நீங்காப் பெருவாழ்வு வாழும் பேரா.இரத்தினம் விக்னேஸ்வரன் அவர்களின் ஆத்மா இறைபாதத்தில் அமைதி பெற பிரார்த்திப்பதோடு, அவரது இழப்பின் வலிசுமந்திருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளின் துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.
Post a Comment