நாட்டில் நடைபெறாத தேர்தலை எப்படி ஒத்திவைப்பது என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை என்றும், தேர்தலுக்கான நிதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை நடத்துவதில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சிலர் மார்ச் 9 தேர்தல் நடத்தப்படும் எனக் கூறுகின்றனர். ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினரான மொஹமட்டும் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்து, அதற்காக ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியைப் பெற்றுள்ளனர்.
எனவே, மற்றைய மூன்று உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டில் இருக்கமாட்டார்கள். இந்த நிலையில் அது குறித்து கலந்துரையாட வேண்டும். நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது?
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை, தேர்தலுக்கான நிதி இல்லை எனக் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்குச் செல்வதாக எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? மக்களுக்குப் பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் உங்களுக்குப் பிரச்சினையா?" - என்றார்.
Post a Comment