தமிழரசின் தலைவராக சிறீதரன் தெரிவு - ஒன்றாகவே பயணிப்போம் என்கிறார் சுமந்திரன் - Yarl Voice தமிழரசின் தலைவராக சிறீதரன் தெரிவு - ஒன்றாகவே பயணிப்போம் என்கிறார் சுமந்திரன் - Yarl Voice

தமிழரசின் தலைவராக சிறீதரன் தெரிவு - ஒன்றாகவே பயணிப்போம் என்கிறார் சுமந்திரன்



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

தலைமைப் பதவிக்குப் போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்காகத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை இன்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கூடியது.

இதன்போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகளுக்கமைய சிறிதரன் எம்.பி. 186 வாக்குகளையும், சுமந்திரன் எம்.பி. 137 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

மற்றுமொரு வேட்பாளரான முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன், சிறிதரன் எம்.பிக்கு ஆதரவு வழங்கினார்.

இதன் அடிப்படையில் 49 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுக்கொண்ட சிறிதரன் எம்.பி. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைவர் தெரிவு நடைபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி., 

"தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் மிகவும் ஆரோக்கியமாக எமது கட்சி, ஒரு உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பன் சிறீதரனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் இருவரும் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். எங்களுடைய தலைவர் அண்ணன் மாவை சேனாதிராஜா இத்தனை காலமும் வழிநடத்திய தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு இப்போது சிறீதரனின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சந்தோஷமான விடயம். கட்சியின் பயணத்தில் நாங்கள் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம்." - என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post